லாஸ் ஏஞ்சல்ஸ்…
அய்யோ பாவம்னு நினைச்சு இடம் கொடுத்தா… படுக்க பாய் கேட்பானாம்…
“இவன் ஒரு படி மேல போய் பக்கத்துல படுக்க ஆள் வேணும்னு கேக்குறான்… ராஸ்கல்…!” யாழினி கொதித்துக் கொண்டு இருந்தாள்….
“என்னை காதல் பண்ணு… காதல் பண்ணுனு… அவள் போகும் இடம் எல்லாம் வந்து இம்சை செய்கிறான்….!!” இவளுக்கு பயந்து கொண்டே, அவள் அவன் கண்ணில் படாமல் சுத்தினாலும்…. எப்படி தான்கண்டு பிடிப்பானோ… அவள் வாசனையை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறான்…. வீட்டிலும் இவன் அட்டகாசம் தாங்க முடிவதில்லை… இவனுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்க….
அந்த நாளும் வந்தது…. ஆம், ஹரிச்சந்திரன்… பணி நிமித்தமாக வெளியே செல்ல வேண்டி வந்தது, அதுவும் மூன்று நாட்கள்….
சொல்ல வா வேண்டும் ,அவர் எப்போ வெளியே செல்லுவார், இவனை வச்சு செய்யலாம் என காத்திருந்த சகோதரிகளுக்கு, இது வாயில் இட்டதும் கரைந்து செல்லும் பால்கோவாக அமைந்து விட….
அடக்கி வைத்த கோபம் அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டனர்…. சேட்டைகளாய்….
அவர்கள் சேட்டைக்குத் தாய் வெண்ணிலாவை அழைக்க… விருந்தோம்பல் பற்றி பாடம் நடத்தி கண்டித்த போதும்… சமத்தாகத் தலை ஆட்டியவர்கள்… அவர் மறைந்ததும்….
அவன் குளிக்கும் போது தண்ணீரை நிறுத்தி விடுவது… உட்காரும் சேரில் ஒரு காலை உடைத்து வைத்து அவன் அமர்ந்ததும்… கீழே விழும் படி செய்வது… இரவில் அவன் எ.சியைப் பழுது ஆக்கி விடுவது… மற்றும் அறையில் குடலை பிரட்டும் நத்தம் வரும் பொருளைப் போட்டுவிட்டு கதவை அடைத்து வைப்பது… போன்ற செயல்கள்… ஆனாலும் நிரஞ்சனையே “அடுத்து என்ன செய்யப் போறாங்களோ..?” என்கிற பீதியில் அலைய விட்டனர்… குறும்புகார சகோதரிகள்….
அதே போல் இன்று என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ என்கிற பயத்தில், வீட்டுக்குச் செல்லாமல் அவர்கள் தூங்கிய பின் செல்லலாம் என விளையாட்டு மைதானத்தில் காத்திருந்தான்
அவனது கவனத்தை ஈர்த்தது அந்த கும்பல்… அதுவும் அவர்கள் அணிந்திருந்த உடையில் மண்டை ஓடு பதித்து… கழுத்து, கை, கால் அனைத்திலும் அபாயகரமான டாட்டூக்கள் போட்டிருந்தனர்….
இது அங்கு சாதாரணம் தான், ஆனால் அவர்களோடு… நின்று கொண்டிருந்த சிறு பெண்ணை ஆச்சரியத்துடன் பார்த்தவன், அருகில் சென்று பார்க்க….
அம்மு அவர்களிடம் கெஞ்சி அழுது கொண்டு இருந்தாள். ஏன்…? எதுக்கு…??
அருகில் சென்று பார்க்கும்போது… கண்களில் மிரட்சியும்… நிம்மதியும் நொடியில் தோன்றி மறைந்தது….
அவளிடம் “என்ன பிரச்சினை அம்மு…?” என கேட்க அதற்குள், உடல் முழுவதும் டாட்டூ வரைந்து கண்ணு, காது, மூக்கு, வாய் அனைத்திலும் வளையங்கள் அணிந்த ஒருவன்….
அம்முவை மறைத்துக்கொண்டு “என்ன வேணும்…?” என எகிறி நின்று கொண்டிருக்க….
“நான் அம்முவின் மாமா..!” என்று அறிமுகம் செய்து கொண்டு மறித்து நின்றவனைத் தள்ள… அவன் அப்படியே குப்புற விழுந்தான்….
“என்னடா அம்மு, உனக்கு இவங்கள தெரியுமா..?” என அமைதியாக கேட்க….
அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு, வார்த்தை வராமல்… கண்களில் கண்ணீரோடு மறுத்த அவளைப் பார்த்தவன்… அவர்கள் ஏதோ இவளுக்குத் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்… அதான் பயந்துவிட்டாள்… என அவதானித்தான்….
அம்முவின் பிடித்த கையைப் பிடித்துக்கொண்டு இவன் அழைத்துச் செல்ல… அதற்குள் கீழே விழுந்தவன்… அவன் ஆட்களைக் கூட்டி வந்து வம்புச் சண்டைக்கு அழைப்பு விடுக்க….
அங்கிள்…” என பயந்தவள் நிரஞ்சனின் முதுகில் ஒட்டிக்கொண்டாள்… அவளிடம் தன் வாட்ச்சை கழட்டி கொடுத்தவன்…
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கைகளை உதறிவிட்டு மீண்டும் வாங்கி கட்டிக்கொண்டவன்… திகிலுடன் நின்றவளை அழைத்துக்கொண்டு சென்றான்…
அவன் கை வளையலில் இருந்த அம்முவோ… அங்கே தரையில் கை, கால், மூக்கு உடைந்து வலியால் துடித்தவர்களைப் பார்த்துக் கொண்டே வர…
அம்முவை அருகில் உள்ள பார்க்கிற்கு அழைத்துச் சென்று…
“அம்மு…?” என கண்டிப்பான குரலில், திடுக்கிட்டுத் திரும்பியவள் அவனைப் பார்க்க… அதில் “சொல்லு…?” என்னும் கேள்வி தொக்கி இருக்க…
அழுது கொண்டே, அவன் தங்கள் படிக்கும் பள்ளியில் ஒரு மாணவனின் சகோதரன் என்றும்… எதிர்பாராதவிதமாக அவனைப் பள்ளியில் சந்தித்ததாகவும்…
அதில் இருந்து அம்மு செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து வந்தவன், சில நாட்கள் முன் அம்மு ஃபுட்பால் பிராக்டிஸ் செய்யும் பொழுது… அவனுக்கு கேர்ள் பிரண்ட் ஆக இருக்கும்படி கட்டாயப்படுத்தியதையும்… மறுத்தவளை மிரட்டிவிட்டுச் சென்றதையும்… அதன் பிறகு அம்மு பிராக்டிஸிற்குப் போகாமல் அவனைத் தவிர்த்து வந்ததையும் சொன்னவள்…
“இன்னைக்கு… ஸ்கூல் விட்டு வரும் போது என்ன இங்க வரை விரட்டிட்டு வந்து… எதையோ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தினான் அங்கிள். நான் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல… அப்பாவைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினான்…!” என்று வெடித்து அழ…
அவளை நேராகப் பார்த்து “அதைச் சாப்பிட்டியா…?” எனத் தீவிரமாகக் கேட்க…
“இப்போ இல்லை அங்கிள்… அதைச் சாப்பிட்டால்… தலை சுற்றும், வாந்தி வரும், உடல் பறப்பது போல இருக்கும்…!” என அழுது கொண்டே சொன்னாள்…
அது என்ன என்பதைப் புரிந்து கொண்டவன்… பல்லை கடித்து * ராஸ்கல்ஸ்… எனத் திட்டியவன்… அப்போ இதுக்கு முன்னாடியும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைத்தவன்.
“கொஞ்ச நாள் முன்னாடி பிவர்னு ஹாஸ்பிடல் போனியே அப்போவா…?” என யுகித்து கேட்க…
“ஆம்..” என்று தலையை ஆட்ட… அவள் தலையை ஆறுதலாக வருடியவன்….
“சரி வா வீட்டுக்கு போகலாம்..!” என அழைத்துக்கொண்டு எழ…
அவன் கையை பிடித்துத் தடுத்தவள்… “அப்பா கிட்ட சொல்லுவிங்களா அங்கிள்…!!” என கேட்க… “ப்ளீஸ் சொல்லாதீங்க..” என அதில் இருந்த பொருளை அறிந்தவன்…
அவள் கையை பிடித்து ஆதரவாக தட்டி கொடுத்தவன் ….
“இங்க பாரு அம்மு, அப்பா அம்மா திட்டுறது எல்லாம்… நாம நல்ல வழியில போய் நல்லபடியா வாழணும் தான்…. அப்பா அம்மா கொஞ்சுறது மட்டும் பாசம் இல்லை… அவங்க காட்டுற கண்டிப்பு கூட ஒரு வழியில பாசம் தான்…. நம்ம மேல உள்ள அக்கறையால தான்… நாம கெட்டு போகக்கூடாதுனு இப்போ உன்ன கண்டிக்குற மாதிரி அப்பா அம்மா அவனுக்கு இருந்திருந்தா, அவன் இப்படி மாறி இருக்க மாட்டான்…. முதல்ல அப்பா அம்மா நமக்கு கெடுதல் பண்ண மாட்டாங்கன்னு நம்பு, புரியுதா…?” என அறிவுரை சொல்லி அவளை அழைத்துச் சென்று விவரம் கூறினான். அதை கேட்ட ஹரிச்சந்திரன்….
“உனக்கு என்னடி அவன் கூட பேச்சு… ஸ்கூலுக்கு படிக்க போனாளா… வந்தாளா இல்லாம இந்த வயசுல என்ன இழவை இழுத்து வச்சிருக்க… இனி நீ எந்த ஸ்போர்ட்ஸ்லையும் கலந்து கிழிக்க வேணாம்…!!” என தாமதித்துக்கொண்டு குதித்தான்…
அதில் பயந்து அம்மு வெண்ணிலாவை கட்டிப்பிடித்துக்கொண்டு அழத் தொடங்கினாள்….
“போதும் அங்கிள்…. நிறுத்துங்க….!!” என அவருக்கு மேல் கத்திய நிரஞ்சன்…. சூழ்நிலையை கையில் எடுக்க….
“அம்மு… ஏற்கனவே அந்த பையனோட செயலால பயந்து போய் இருக்கா… அவன் செஞ்ச தப்புக்கும்… அம்முவை குற்றவாளி ஆக்காதீங்க… பேசறதுக்கு முன்னாடி நம்ம அப்படி செஞ்சி இருப்பாளான்னு யோசிங்க… அங்கிள்…..??”
“இதுக்கு முன்னாடியே நம்ம பொண்ணு கிட்ட அவன் தப்பா நடந்து இருக்கான், அதனால அம்மு ஹாஸ்பிடல் போக வேண்டிய நிலைமை கூட வந்துச்சு….!!” என்றதும்…. ஹரிச்சந்திரன் வெண்ணிலாவை பார்க்க…
அவர் அழுது கொண்டே… “ஆம்” என தலை அசைக்க… நிலை குலைந்து போனார்….
“ஏன் அப்போவே வந்து உங்கிட்ட சொல்லல தெரியுமா…. பயம்… எங்க அப்பா… தன்னை நம்பாம போய்டுவாரோன்னு…. அவளே தனியா மனசுக்குள்ள வச்சி புழுங்கி இருக்கா… பிள்ளைங்க கிட்ட கண்டிப்பா மட்டுமே காட்டினா.. அவங்க கண்ணுக்கு நாம ஒரு சர்வாதிகாரியா தான் தெரிவோம்…!!” என்றதும் மனிதர் விக்கித்து போய் மகள்களை பார்க்க…
“எனக்குத் தெரியும் அங்கிள், உங்களுக்கு… உங்க மகள்கள் என்றால் உயிர்னு… ஆனா இது அவங்களுக்குத் தெரியாத மாதிரி உங்க கோவமும் கண்டிப்பும் தடுத்துடுச்சு… பிள்ளைகளை கண்டிப்பா வளர்க்குறதுல தப்பில்லை அங்கிள்… ஆனா அதுக்கான காரணம் சரியா இருக்கான்னு பார்க்கணும்… அவங்க தப்பு பண்ற இடத்துல முதல்ல சுட்டிக்காட்டணும்… தடுக்குற இடத்துல தட்டி கொடுக்கணும்… கடைசியா சொல்லி புரியவைக்க முடியலைன்னா தான்… அதிகாரத்தை கையில் எடுக்கணும்…!!” என்று பேசி முடித்தவன், ஹரிச்சந்திரானைப் பார்க்க…
அவர் உறைந்து போய் அமர்ந்திருந்தார்…
அது நிரஞ்சன் அடுக்கிய குற்றச்சாட்டால் இல்லை… ஆனால் அவன் சொல்வதற்கு எல்லாம் மறுப்பு கூறாமல் இருக்கும் தன் மகள்களையும் விட… அவன் சொல்வதை ஆதரிப்பதாக அவன் பக்கம் நின்ற மனைவியால்…
அப்போ நான் இந்த பையன் சொல்ற மாதிரி சர்வாதிகாரியா..??? ஆமா இல்லனா அம்முக்கு இவ்ளோ ஆகி இருக்கு அதை என்கிட்ட சொல்லாம மறைச்சு இருப்பாளா…. என கோபம் வந்த போதும்… நீ எப்போ ஃப்ரெண்ட்லியா இருந்த பசங்க கிட்ட என யோசிக்க… அப்படி ஒரு நிகழ்வே இல்லை என அவர் மூளை மறுக்க….
ச்ச… என் பிள்ளைங்க கிட்ட என்ன மாதிரி ஒரு அப்பாவா இருக்கேன்… ஒருவேலை நிரஞ்சன் கண்டு பிடிக்கலைனா அம்முக்கு என்ன ஆகி இருக்கும் ஐயோ பிள்ளை எப்படி பயந்து இருக்கும் அந்த **** மிரட்டும் போது… அப்பாவை தேடி இருப்பாளா…?? இல்லைனாலும் இனி பிள்ளைகளை யாருக்காகவும் விட மாட்டேன் என யோசித்துக் கொண்டு இருக்க….
சாரி அங்கிள் நான் பேசினது உங்க மனசை கஷ்டப்படுத்தியிருந்தா… என்ன மன்னிச்சுடுங்க…. என் மேல தப்பு இருந்தா நான் இந்த வீட்டை விட்டே போயிடுறேன்… ஆனா நான் சொன்னது உண்மை அங்கிள்…!! என மன்னிப்பு கேட்டு விட்டு விலகி போக நினைக்க…
“நில்லு பா…!!” என அதுவரை அவர் காத்த அமைதியைத் துறந்தவர்….
அம்முவிடம் சென்று… “சாரி குட்டிமா…” என்றவர்… “ரொம்ப பயந்துட்டியாடா?” எனப் பரிவாகக் கேட்க….
“அப்பாஆஆஆஆ..!” என கதறிக்கொண்டு கட்டிப்பிடித்துக்கொண்டாள் குழந்தை…..
அவளை அணைத்துக்கொண்டே யாழினியைப் பார்த்து கை நீட்டி “சாரி…” என அழைக்க… அவளும் அழுதுகொண்டே தந்தையை கட்டிப்பிடிக்க…
கணவனை கேள்வியாகப் பார்த்த மனைவியிடம் கண்ணால்… “ஆம்” எனச் சொல்ல… அத்தனை வருடத் தாம்பத்தியம் ஒரே நாளில் பூரணம் கொண்டது போல் ஓடிச் சென்று, கணவன் கை வளைவில் நின்று மகள்களை அணைத்துக்கொண்டே கணவன் நெஞ்சில் சாய்ந்தார்கள்…
ஆத்மார்த்தமான உணர்ச்சிகள் நிரம்பிய அழகான தருணம்…. அதை பார்த்துக் கொண்டு நின்றிருந்த நிரஞ்சன்…. அவர்களுக்குத் தனிமை கொடுத்து… பின்வாங்கிச் செல்ல… அவன் இடது கையைத் தடுத்து நிறுத்தியது ஒரு கை…
யார் என்று திரும்பிப் பார்க்கையில்…. யாழினி… தலையைத் தூக்கி அவனைப் பார்த்து கண்ணீரோடு ஒரு புன்னகை செய்தாள்…
அதன் பிரதிபலிப்பு நிரஞ்சனின் இதழிலும்….
மதுரமான ஒரு காதல் காட்சி….



