ஷர்மிளா சென்ற இடத்தை துப்பு துலக்கி அவர்கள் சென்றது… நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட்டிற்கு… பதைபதைக்கும் நெஞ்சோடு… அவர்கள் தேடிச் சென்ற வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது… கதவைத் தட்டியும் பலன் இல்லாததால்…
சத்யாவும் மஹாவும் அருகில் இருந்த பூ தொட்டியைத் தூக்கி உடைத்து, கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக, அங்கே அவர்கள் கண்ட காட்சி ஏட்டில் வடிக்க முடியாதது… வீடு முழுவதும் புகை சூழ்ந்து இருந்தது… இவர்கள் வந்ததைப் பற்றி கூட கவலைப்படாமல் ****** கிடந்த மிருகத்திலும் கீழான ஜென்மங்களைக் கடந்து… கயலைத் தேடி உள்ளே சென்றவர்களின் உயிர்மூச்சு உறைந்து போய் நின்றது; காரணம், அங்கே கயலோ சொல்ல முடியாத நிலையில் சில வெறி நாய்களின் பிடியில் மாட்டிக்கிடந்தாள். அவளைக் காக்கும் பொருட்டு, கைக்குக் கிடைத்த பொருளை வைத்து அவர்களை அடித்து நொறுக்கினர்; ஏற்கனவே தள்ளாடும் போதையில் இருந்தவைகளை வீழ்த்த பெண்களுக்கு எளிதாக இருந்தது.
பதறித் துடித்துப் போய் கயலைப் பார்க்க… தனக்கு என்ன நிகழ்கிறது என்பது கூட அறிய முடியாத நிலையில் கிடந்தவளைச் சாதுரியமாகப் காப்பாற்றி வந்தனர் இருவரும்…. அதிலிருந்து விடுபட்டு கயல் கண் திறக்கவே இரண்டு நாளானது…
ஒரு வாரம் கழித்து ஒன்றுமே நடவாதது போல் வந்த ஷர்மிளாவைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்து விட்டனர் மூவரும்…. அவளைப் பற்றிப் புகார் அளித்த பின்பு பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிந்து கொண்டனர்
அது என்னவென்றால், ஊருக்கு புதிதாக வரும் பெண்களில் ஏழ்மை நிலையில் உள்ள பெண்களையும் ஆதரவற்ற பெண்களையும் அவள் குறிவைப்பவள். அவர்களிடம் நெருங்கிப் பழகி, அவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு அதில் சுகபோகமாகச் செலவு செய்பவள்… அந்தப் பெண்கள் பணத்தைத் திருப்பி கேட்டால், நண்பரிடம் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று சில மேல்மட்டக் கோமான்களுக்கு விருந்தாக்கி விடுவாள்… இதில் அவலம் என்னவென்றால், அந்தப் பெண்களைப் படம் எடுத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்பதோடு, அவர்களை இது போன்ற சில விருந்துகளில் கம்பெனி கொடுக்க வைக்கத் தனி கமிஷனும் பெற்றுக்கொள்வாள்… இவளால் சில பெண்கள் காணாமல் போய் இருக்கின்றனர்… அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது அவளுக்கே தெரியாது…
இதை அறிந்து கொண்ட சத்யா மற்றும் கயல், தாங்கள் எவ்வளவு பெரிய இக்கட்டில் இருந்து தப்பித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டனர்… “இப்போ புரியுது கயல், உன்னை எல்லார் கூடவும் பழக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் பழகுற மனுஷங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு பார்த்துப் பழகு, எல்லாரையும் ஒன்னு போல நம்பிடக் கூடாது…!” என அறிவுரை கூறி முடித்திருந்தனர்.
ஆனால் அதுதான் துவக்கம் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போனது…
அவர்கள் நினைத்தது போல் ஷர்மிளாவிற்குத் தண்டனை எதுவும் கிடைக்கவில்லை; சொல்லப்போனால் ஷர்மிளா கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே வெளியே வந்துவிட்டாள் என்பது கூட இவர்களுக்குத் தெரியாது….
அப்படி இருக்க, அவர்களே எதிர்பாராத ஒன்றுதான் அவர்கள் அறையில் ஷர்மிளா இறந்து கிடந்தது….
“செத்தது ஷர்மிளா எனில் அவளைக் கொன்ற கொலையாளி யார்…???” என்கிற கேள்விக்கான விடையை இந்த உலகத்திற்கு முன்னால் கொண்டு வர வேண்டியது எங்க பொறுப்பு…!!” என கரிகாலன்.
“உங்க தோழி கிட்ட சொல்லுங்க, எல்லா ஆம்பளையும் சதையை மட்டும் பார்க்கிறது இல்லைன்னு…!!” என கூறிய கெளதம் முன்னே செல்ல, அவனைத் தொடர்ந்து மற்ற இருவரும் சென்றனர்…
போகும் ஆண்களைப் பார்த்துக்கொண்டிருந்த கன்னியர்களின் எண்ணங்களில் தத்தம் தலைவனின் நினைப்பே இருந்தது…
அடுத்து என்ன செய்வது எனத் திட்டம் தீட்டியபடி கிளம்பத் தயாரான நாயகர்களிடம் வந்த வீரையன்…
“தம்பி, நான் உங்க ஆறு பேருக்கும் மாப்பிள்ளை விருந்து இன்னைக்கு இராவுக்கு வைக்கச் சொல்லி இருக்கேன் தம்பி. தடபுடலா ஏற்பாடு ஆகுது… இன்னைக்கு ஒரு நைட் இருந்துட்டு நாளைக்கு வெள்ளன போங்க சரியா…!!” என அன்பு கட்டளையிட்டான்…
மறுக்க முடியாதவர்கள் என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்துவிட்டு, பெண்களிடம் அனுமதி கேட்கும் படி கூறிவிட்டுத் தப்பிக்க நினைத்தனர்…
ஆனால் அவர்களோ விருந்துக்குச் சம்மதம் தெரிவித்து ஆண்களைப் பேராதிர்ச்சிக்கு உள்ளாக்கினர்.
“என்னடா நடக்குது இங்க…!!” என அதிர்ச்சியடையும் வண்ணம் அடுத்தடுத்து விருந்து ஏற்பாடுகள் நடந்தேறின; அவை யாருக்கு எப்படியோ ஆண்களுக்குக் காட்டில் அடைமழை தான்…

